×

லீ மெரிடியன் ஓட்டல் சொத்துகளை ரூ.423 கோடிக்கு எம்ஜிஎம் ஹெல்த்கேர் நிறுவனத்திற்கு மாற்ற தடை: நிறுவன சட்ட மேல்முறையீடு தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: சென்னையில் உள்ள லீ மெரிடியன் உள்ளிட்ட அப்பு ஓட்டல்ஸ் நிறுவனத்தின் சொத்துகளை 423 கோடி ரூபாய்க்கு எம்ஜிஎம் ஹெல்த்கேர் நிறுவனத்தின் எம்.கே.ராஜகோபாலனுக்கு வழங்கும் நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்த தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. பிரபல தொழிலதிபர் பழனி ஜி.பெரியசாமியின் அப்பு ஓட்டல் நிறுவனம் இந்திய சுற்றுலா நிதி நிறுவனத்திடம் வியாபார நடவடிக்கைகளுக்காக கடன் பெற்று இருந்தது. அந்த கடனை திருப்பி செலுத்தவில்லை என்பதால் அப்பு ஓட்டல் நிறுவனம் திவாலானதாக கருதி சென்னை மற்றும் கோவையில் உள்ள அவருக்கு சொந்தமான லீ மெரிடியன் ஓட்டல்களையும், கும்பகோணத்தில் உள்ள ரிவர்சைட் ஸ்பா மற்றும் ரிசார்ட்டையும் விற்று கடனை அடைக்க அனுமதிக்க கோரி தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் இந்திய சுற்றுலா நிதி நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இதை விசாரித்த தீர்ப்பாயம், அந்த சொத்துகளின் மதிப்பை கணக்கிடுவதற்கும், அவற்றை வாங்குவதற்கான நபரை கண்டறிவதற்கும் தீர்வாளரை நியமித்தது. இந்த சொத்துகளின் மதிப்பு 730.88 கோடி ரூபாய் எனவும், 569.33 கோடி ரூபாய்க்கு வாங்குபவர்களுக்கு விற்கலாம் எனவும் தீர்வாளர் முடிவெடுத்தார். அவற்றை  வாங்குவதற்கு மாதவ் திர், எம்ஜிஎம் ஹெல்த்கேர் நிறுவனத்தின் எம்.கே. ராஜகோபாலன், கோட்டக் ஸ்பெஷல் சிச்சுவேஷன் ஆகியோர் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், ராஜகோபாலன் குறிப்பிட்டிருந்த 423 கோடி ரூபாய்க்கு அவற்றை விற்கலாம் என்று தீர்வாளர் அளித்த பரிந்துரையை ஏற்ற தீர்ப்பாயம், அப்பு ஓட்டல்ஸ் நிறுவனத்தின் லீ மெரிடியன் உள்ளிட்ட 4 சொத்துகளை எம்ஜிஎம் ஹெல்த்கேர் நிறுவனத்தின் எம்.கே.ராஜகோபாலனிடம் மாற்ற அனுமதித்து. இதை எதிர்த்து அப்பு ஓட்டல் நிறுவனத்தின் இயக்குனர் பழனி ஜி.பெரியசாமி தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதித்துறை உறுப்பினர் எம்.வேணுகோபால், தொழில்நுட்ப வல்லுநர் உறுப்பினர் வி.பி.சிங் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, பழனி ஜி.பெரியசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எச்.அரவிந்த் பாண்டியன், தீர்வாளர் தர்மராஜன் ராஜகோபாலன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், எம்.கே.ராஜகோபாலன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராம்ஜி சீனிவாசன் உள்ளிட்டோர் ஆஜராகினர். மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் அர்விந்த் பாண்டியன், 1600 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது. தங்கள் நிறுவனத்தின் கடனை அடைக்க மற்ற வங்கிகள், நண்பர்கள் மூலம் 450 கோடி ரூபாயை ஏற்பாடு செய்ய தயாராக உள்ளோம். எனவே, தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

தீர்வாளர் ராதாகிருஷ்ணன் தர்மராஜன் மற்றும் எம்ஜிஎம் ஹெல்த்கேர் நிறுவனத்தின் ராஜகோபாலன் ஆகியோர் தரப்பில் மதிப்பீடு முறையாக செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை ஏற்று தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவிற்கு தடை விதிக்க எதுவும் இல்லை என வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாய உறுப்பினர்கள்,”அப்பு ஓட்டல்ஸ் நிறுவனத்தின் வழக்கு குறித்து தீர்வாளரும், எம்ஜிஎம் ராஜகோபாலனும் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஆகஸ்ட் 25ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. அதுவரை அப்பு ஓட்டல்ஸ் சொத்துகளை எம்.கே.ராஜகோபாலனுக்கு மாற்றும் நடைமுறைகளை மேற்கொள்ள அனுமதித்த தீர்ப்பாய உத்தரவிற்கு தடை விதிக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டனர். 1600 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது. கடனை அடைக்க 450 கோடி ரூபாயை ஏற்பாடு செய்ய தயாராக உள்ளோம்.


Tags : Le Meridien ,MGM Healthcare , Ban on transfer of Le Meridien hotel assets to MGM Healthcare for Rs 423 crore: Company Law Appeal Tribunal orders
× RELATED சென்னை லீ மெரிடியன் ஓட்டல் வழக்கு:...